திருவிழாவில்
தவறிப்போன சிறுவன்
தன் அக்காவைத் தேடி
கூட்டத்தில்
அழுதுகொண்டே நிற்கிறான்
அக்கா நீலத் தாவணி
அணிந்தவள் என்பதைத் தவிர
அவனுக்குச் சொல்ல
எதுவுமே இல்லை
நீலத்தாவணி அணிந்த அக்கா
ஒரு நீல நிழலைப்போல
இந்தக் கூட்டத்தில் எங்கோ
மறைந்து நிற்கிறாள்
இத்தனை ஆயிரம் ஜனங்கள்
நடக்கும் இந்தப் பாதையில்
ஒரு நீலத் தாவணி அணிந்தவளைத்தேடி
நடையாய் நடக்கிறேன்
நீலக் கண்களுடையவளைப் பார்த்தேன்
நீலம் பாரித்த உதடுள்ளவளைப் பார்த்தேன்
நீல மலர்களைச் சூடியவளைப் பார்த்தேன்
நீலத் தழும்புள்ளவளைப் பார்த்தேன்
நீலக் கல் மூக்குத்தியணிந்தவளைப் பார்த்தேன்
ஒரு நீலத் தாவணியணிந்தவளைத் தவிர
நீலத்தோடு தொடர்புடைய
எல்லாப் பெண்களையும் பார்த்தேன்
ஒரு குழந்தை
கூட்டத்தில் காணாமல் போகிறான்
அவனது நீலத் தாவணியணிந்த அக்கா
ஆகாயத்தின் நீலத்தால் கவரப்பட்டிருக்க வேண்டும்
அல்லது கடலின் நீலத்தால் குடிக்கப்பட்டிருக்கவேண்டும்
சிறுவன் அழுதுகொண்டே இருக்கிறான்.
நான் எனது எல்லா லட்சியங்களையும் கைவிட்டு
ஒரு நீலத் தாவணியணிந்தவளைத் தேடுகிறேன்
இந்த உலகின் மகத்தான துயரம் ஒன்றை
எப்படியும் தீர்த்துவிடுவேன் என்றுதான் நம்புகிறேன்.
நீலத்தாவணி அணிந்த அக்கா
ஒரு கடையில் நிதானமாக
இளநீர் குடித்துக்கொண்டிருக்கிறாள்
சிறுவன் அழுதுகொண்டே
அவளை நோக்கி ஓடுகிறான்
அவள் தனது நீலத் தாவணியால்
அவனது கண்களை சமாதானமாகத் துடைக்கிறாள்
என் நீலத் தாவணியணிந்த அக்காவைத்
தொலைத்துவிட்டு...
-------------------------------------------------------------------------------------------------------------------------
2 ◄◄ கழுவிக் கழுவி ஊத்த ►►:
நல்லாயிருக்கு நண்பரே .....
நன்றி நண்பரே!
Post a Comment
♥ நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க ♥