தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!
நான் அப்போதுதான்
என் ஆடைகளை
அவிழ்க்கத் தொடங்கியிருக்கலாம்
நான் அப்போதுதான்
அழத் தொடங்கியிருக்கலாம்
நான் அப்போதுதான்
என் சிசுவுக்கு
முலையூட்டத் தொடங்கியிருக்கலாம்
நான் அப்போதுதான்
ரத்தக் கறைபடிந்த
என் கொலைக்கருவியை
பார்க்கத் தொடங்கியிருக்கலாம்
தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்
நான் விதைக்குள் தவிக்கும்
ஒரு தளிரை விடுவித்துக்கொண்டிருக்கக்கூடும்
நான் ஒரு பறவையின் மனதை அறிய
ஒரு கிளிக்கு
பேச்சுப் பழக்கிக்கொண்டிருக்கக்கூடும்
நான் சுவரில் தொங்கும் ஒரு கடிகாரத்தையே
பார்த்துக்கொண்டிருக்கக்கூடும்
நான் ஒரு கனவின் பாதி வழியில்
நின்றுகொண்டிருக்கக்கூடும்
தயவுசெய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்
யாரேனும் ஒருவர்
பார்க்கக் கூடாத ஒன்றைப்
பார்த்துக்கொண்டிருக்கலாம்
யாரேனும் ஒருவர்
கேட்கக் கூடாத ஒன்றைக்
கேட்டுக்கொண்டிருக்கலாம்
யாரேனும் ஒருவர்
திறக்கக் கூடாத ஒன்றைத்
திறந்துகொண்டிருக்கலாம்
யாரேனும் ஒருவர்
இழக்கக் கூடாத ஒன்றை
இழந்துகொண்டிருக்கலாம்
தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
இந்த அற்ப சாகசங்கள் முடிவுக்கு வந்துவிடும்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
பாதிப் பைத்தியம் தெளிந்துவிடும்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
இசைத் தட்டுகள் நின்றுவிடும்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
ஒரு கதவை மூடிவைக்கும்
எல்லா தேவைகளும் விலகிவிடும்
தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு
உள்ளே வரவும்
கடவுள் உங்களை
மன்னிக்க மாட்டார்
ஒரு சுருக்குக் கயிற்றின்
கடைசி முடிச்சை போடுவதை
நீங்கள் தடுத்து விடும்போது
கடவுள் உங்களை
ஏற்றுக்கொள்ள மாட்டார்
ஒரு விடைபெறும் முத்தத்தின் பாதையில்
நீங்கள் குறுக்கிட்டுவிடும்போது
கடவுள் உங்களோடு
பேசுவதை நிறுத்திவிடுவார்
எல்லா உணர்ச்சிகளையும் நீங்கள்
கடவுள் உங்களுக்கு
கதவு திறக்க மறுத்துவிடுவார்
நீங்கள் மூடப்பட்ட ஒரு அறையின் கதவுகளை
இவ்வளவு சந்தேகத்துடன் பார்க்கும்போது
தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!